
கடவுளின் தாய் யாரென்று தெரியுமா ....
ஆயா /பாட்டி/அப்பத்தா/ ஆயி/ அம்மம்மா எப்படி கூப்பிட்டாலும் அவர்கள் கடவுளின் தாய் தான்
ஆயாக்கள்...... வாழும் பிரமிடுகள்
காய்ச்சல் நிறைந்த ஒரு மாலைப்பொழுதில் என்னை கோவிலுக்கு அழைத்துச் சென்று வேப்பிலை அடித்து விட்டாள் , அது பரவாயில்லை....
அந்த கடவுளின் தாய், கடவுளையே மிரட்டினார் " நெமிலி அம்மா என் குழந்தையை பார்த்துக்கோ.. இது மாதிரி பண்ணிக்கிட்டு இருந்த அப்புறம் உனக்கு அவ்வளவு தான் " என்றாள் ..
நெமிலி அம்மா கொஞ்சம் அதிர்ந்துதான் போயிருப்பாள்
பாட்டிகள் என்றைக்கும் தாத்தாக்களுக்கு பயந்தது இல்லை "அவர் கிடக்கிறார்" என்று அனாவசியமாக கடந்து செல்வார்கள்
சென்னாகுன்னி குழம்பு, குடல் வறுவலும் என் பாட்டி மறைவுக்குப் பிறகு எங்கள் குடும்ப மெனுவில் இருந்து காணாமல் போனது
பாட்டிகள் கடுமையான உழைப்பாளிகள் , அத்தனை உழைப்புக்கும் நடுவில் அவர்கள் மறக்காமல் ஊர்க்கதை பேசுவார்கள்
" ஏண்டி இவளே" இப்படித்தான் ஆரம்பிப்பாள் எப்போதும் என் பாட்டி
பாட்டிகளின் அறியாமையில் ஒரு அழகு இருந்தது
"பாட்டி நலாவிற்கு (நிலா) ஆள் போய்ட்டாங்களாம் தெரியுமா உனக்கு" என்றேன் நான்
" யாரை ஏமாத்துற" என்றாள் சிரித்துக் கொண்டே..
" எட்டு வண்டி நூல் போட்டாலும் எட்டாது அந்த நிலா ....
10 வண்டி நூல் போட்டாலும் பத்தாது நிலாவுக்கு" என்று எகத்தாளமாய் பாடினாள்.
மெஷினுக்கு கேழ்வரகு மாவு அரைக்க ஒருமுறைக்கு தனியாக அனுப்பினார்கள் என்னை, மூச்சிரைக்க ஓடி வந்தார் என் பாட்டி.... "பரவாயில்லை ஆயா "என்றேன் நான்.
"நீ பட்டணத்து புள்ளை ...உனக்கு இது எல்லாம் தெரியாது குடு அதை "என்றாள். வீட்டுக்கு வந்த பிறகு என்னை வேலை வாங்கியதற்காக ஒரு ருத்ரதாண்டவம் ஆடினார் .
சென்னையில் இருந்து முழு ஆண்டு லீவுக்கு தான் ஊருக்கு வருவேன், என்னை பார்க்க ஒரு கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் பேருந்து நிலையத்திற்கு வந்து விடுவார் என் ஆயா ...
வெயிலில் கிட்டிப்புள் விளையாடும் இடம் தேடி வந்து "சின்ன பசங்களா நிலாவா காயுத எல்லாம் ஊட்டுக்கு ஓடுங்க "என்று விரட்டுவார்
எல்லோரிடத்திலும் குறை கண்டுபிடிக்க முடிந்தத என்னால் ... என் பாட்டியிடம் எந்த குறையும் கண்டுபிடிக்க முடியவில்லை...
மரணத்தருவாயில் படுத்துக் கொண்டிருந்தால் என் ஆயா.... பக்கத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தேன்....
சன்னமான குரலில் கேட்டாள் "சாப்பிட்டியா" என்று....
மரணப் படுக்கையில் கூட பேரன் சாப்பிட்டானா என்று கேட்கிற ஆயாக்கள்..... கடவுளின் தாய் அன்றி வேறென்ன......
Comments
Post a Comment